Saturday, July 30, 2005

எ.அ.பாலா - I Birthday & Flashback !

இன்றோடு (JULY 30) என் வலைப்பதிவுக் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தி அடைந்தது !!! இந்த நேரத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த (வலைப்பதிவு!) குழந்தை உருவாகவும், அதை பிரசவிக்கவும் (தமிழ் வலையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியும், தமிழில் வலை பதிவதற்கு தேவையான டெக்னிகல் சமாச்சாரங்களை விளக்கியும்!) பேருதவியாக இருந்த 'டாக்டர்' தேசிகன் அவர்களுக்கும், புதுக் குழந்தையை அன்போடு அரவணைத்த சித்தப்பா காசிக்கும் என் நன்றிகள்! குழந்தை போஷாக்காக வளரவும் (என்னென்ன பதிந்தால் சுவாரசியமாக இருக்கும் என்றும்!) டாக்டர் தேசிகன் தன்னால் இயன்றதை செய்திருக்கிறார் !

குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. தொடக்க காலத்தில், அன்பர்கள் சிலர் (சந்திரவதனா, சிலந்தி ரமணி, அன்பு, மூர்த்தி, யளனகபக கண்ணன், இரவிக்குமார், டோண்டு, கோபி, பத்ரி ஆகியோர்) குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக (பின்னூட்டமிட்டும், பாராட்டியும்!) இருந்தனர்!

தவழ ஆரம்பித்த குழந்தை பக்கத்து வீடுகளுக்கு (மற்றவர் பதிவுகளில் கருத்து சொல்ல!) செல்லத் தொடங்கியது. பொதுவாக நல்ல வரவேற்பும் இருந்தது ! சில வீடுகளில் பொருட்களை உடைத்து (பின்னூட்டச் சண்டை சச்சரவில் மாட்டி!) அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கு (அவ்வப்பொழுது!) ஆளானதும் உண்டு ;-)

பின், குழந்தை தத்தி தத்தி மெல்ல நடை பயில (கதை, கவிதை, அரசியல், சமூகம், சினிமா, விளையாட்டு குறித்து பதிவுகள் போடத் துவங்கியதைத் தான் சொல்கிறேன்!!!) ஆரம்பித்தது. முதல் 6 மாதங்கள் குழந்தை பூர் ஜென் ஞா கங் ளில் அவ்வப்போது திளைத்திருந்தது !

நண்பனுக்கொரு மடல் எழுதி ஆனந்தப்பட்டது !!!

குழந்தை ஆர்வமாக பலமுறை ஈடுபட்ட ஒரு ஜாலியான கேளிக்கையில் பலரும் பங்கெடுத்துக் கொண்டு குழந்தையை குஷிப்படுத்தினர் :)

குழந்தை சிலபல கோமாளித்தனங்கள் (சிரித்ததற்காக கைது, படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 1 , 2 , 3 , 4 , 5 , 6 , அலுவலக வழிப்பாட்டு பாடல் , மது , மனைவிகள் போன்ற பதிவுகள்!) செய்து பார்க்க வந்தவரை கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது !

அவ்வப்போது, சில தத்து பித்து குசும்புகள் பண்ணி சிலரை (விளையாட்டாகத் தான், குழந்தை தானே !)கலவரப்படுத்தியிருக்கிறது !!!

ஒரு முறை வெகுண்டிருக்கிறது !!!!!

நல்ல உள்ளங்களையும், திறமையையும் (Dr.வம்ஷி மூதா , MS சுப்புலஷ்மி , வெங்கடெஷ் , சுஜாதா , சகாயராஜ் , கிருஷ்ணன் ) கண்டு வியந்து பெருமிதம் கொண்டிருக்கிறது.

ஆழ்வார் பாசுரங்களில் உள்ளபக்தி ரஸத்தில் அவ்வப்போது மூழ்கியிருக்கிறது.

கவிதை என்று ஒன்றை கிறுக்கியிருக்கிறது !!!

ராஜ ராஜேஸ்வரியையும் மெட்டி ஒலியையும் பார்த்து மழலைச் சொற்களில் உளறியிருக்கிறது !! அதற்கு அந்திமழைச் சாரலாக பாராட்டும் கிடைத்தது :)

சூழலை குழந்தைத் தனமாக நக்கல் செய்து களிப்படைந்திருக்கிறது !!!

தனக்குப் மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டம் குறித்து
ஆதங்கமும் மகிழ்ச்சியும் கோபமும் பட்டிருக்கிறது.

சில நேரங்களில் தாங்கமுடியாமல் காச்மூச் என்று கூச்சல் போட்டிருக்கிறது !!!

Last but not the least, ரஜினி அங்கிளின் சந்திரமுகியைப் பார்த்து கை தட்டி சந்தோஷ ஆரவாரம் பண்ணியிருக்கிறது !

இதற்கு மேல் என் குழந்தையைப் பற்றி நானே பெருமை பேசினால் நன்றாக இருக்காது என்பதால் இத்துடன் விடு ஜூட் (அல்லது) மாயவரத்தான் பாஷையில் 'அப்பீட்' ஆகிக் கொள்கிறேன் ;-)

இவ்வலைப்பதிவுக் குழந்தையின் (சுமாரான!) வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற ஊக்கத்தை நல்கிய (பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்ட/பின்னூட்டமிடாத, பதிவுகளைப் படிக்காமல் பின்னூட்டமிட்ட/பின்னூட்டமிடாத, +/- நட்சத்திர பரிந்துரை செய்த/செய்யாத!) அன்பான வாசகப் பெருமக்களாகிய வலைப்பதிவுலக நண்பர்களுக்கு, இருகரம் உயர்த்தி நன்றி, நன்றி, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

Good Bye!

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: ஒரு வருடத்தில் பதித்தவை - 148 பதிவுகள் இதையும் சேர்த்து !!!

கலகலகல --- 8 வரிக் கவிதை மாதிரி !

பா.ம.க எதிர்ப்பென எத்தனை நாள் ஜல்லியடிப்பீர் நீங்கள் !
திரையொளித் தலைவனெனெ எந்நேரமும் ஜல்லியடிப்போம் நாங்கள் !
நிழலெது நிஜமெது ..அறியாத் தமிழர்கள் என்றும் எள்ளுவோம் நாங்கள் !

திருமாவின் சிங்கப்பூர் பயணம் ..லூஸ்மோகனின் கோயம்பேடு பயணம்
-- ஜாலிக்கு எழுதினால், 'என்ன கொழுப்பு' என்று பாய்வோம் நாங்கள் !

அன்புமணியின் அரசியல் சாதனை, பெருமை பேசுவோம் நாங்கள் !
தார் பூச்சு ..தில்லி ..ஆங்கிலப்பள்ளி ..என்ன இப்படி என்றால்
ஐயோ, ஊடக வன்முறை என்று கூப்பாடு போடுவோம் நாங்கள் !பின்குறிப்பு:

இது ஒரு ஜாலி (ஜல்லி அல்ல!) கவிதை(யா?) முயற்சி !
மேலும், இது Secularism குறித்த கவிதையும் அல்ல :)

குறிவைத்து எழுதவில்லை என்றும் சொல்ல முடியவில்லை !
ஆனால், நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை.
படித்து விட்டு மறந்து விடவும் :)

Monday, July 25, 2005

லகலகலக - Analysis of Original Risk Analysis

பிளஸ் பாயிண்ட்

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு (சொந்த தயாரிப்புனா பல பிரச்சினைகள் வருமே) --- 2%

ஏற்கனவே இரண்டு மொழிகளில் மெகா ஹிட்டான மகா பாதுகாப்பான கதை - 5%

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது --- 0%

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது --- 0.5%

சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது --- 0.5%

சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது --- 5% (ரசிகர்கள் நலனை மனதில் வைத்ததால் !)

20 வயது கதாநாயகி --- 2%

ஜோதிகாவின் முட்டை கண் மற்றும் நடிப்பு --- 6%

நகைச்சுவை புயல் --- 4%

நாயகனுக்காக கதை என்பதை கதைக்காக நாயகன் என்ற வியூகம் --- 2%

திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள் --- 0.5%

சிலர் துர்நாற்றம் மிக்க இடங்களில்(!) தலைவனைத் தேடுகிறார்கள். ஜனநாயகத்தில் தலைவனை எங்கு வேண்டுமானாலும் தேடிக் கண்டுபிடிக்க / தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை உண்டு தானே!!

நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள் --- 0%

மிக நிச்சயமாக, நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவர்களாகவே தமிழர்களை கருதுகிறேன் ! நிசத்தில் சிலர் அடிக்கும் கோமாளித்தனங்களையும், லூட்டியையும் கண்டு நொந்து நூலாகி, நிழலில் சற்று நேரம் அதை மறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள் !!! அதில், தவறொன்றும் இல்லை.

மற்றும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் --- நூறிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ளவைகளின் சதவிகிதங்களை கழித்துப் பார்த்தால் சுலபமாக கண்டுபிடித்து விடலாமே :) எங்கே, கணித்துச் சொல்லுங்க, பார்க்கலாம்! ரஜினியின் 'பிளஸ் பாயிண்ட் சதவிகித மதிப்பை' முதலில் பின்னூட்டுபவருக்கு, ஒரு பரிசு காத்திருக்கிறது :)மைனஸ் பாயிண்ட்

படத்தை ஹிட் ஆக்கியே தீரவெண்டுமென புகுத்தப்பட்ட இரட்டை அர்த்த நகைச்சுவைகள்
---- சரி தான்! (என் மனைவியும் இதை மைனஸ் பாயிண்டாக குறிப்பிட்டார், so accepted ;-))))) ஆனால், அதற்கும் ஹிட்டுக்கும் சம்மந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

மற்றவைகள் பல பதிவுகளில் விமர்சிக்கப்பட்டு விட்டது

கோபி என் பதிவில் பின்னூட்டியது, உங்களுக்காக, REPEAT .....
*****************************
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் (1933 முதல் 2005 வரை) உலகம் முழுதும் 156 திரையரங்குகளில் 100வது நாள்.

தனது சாதனையை தானே தகர்த்துள்ளார் ரஜினி ( முந்தய சாதனை படையப்பா 139 திரையரங்குகளில் 100வது நாள்)

ஆனால் ஒரு திரைப்படத்தை ரசிகர்களால் மட்டுமே 100 நாட்கள் கடந்து ஓட்ட முடியாது. பொது மக்களும் Repeated Audience என்று சொல்லக் கூடிய சாதாரண மக்களும்தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
********************************

பின்குறிப்பு:

சை... கடைசியில் என்னையும் 'லகலகலக' பற்றி analysis பண்ண வைத்து விட்டார்களே .... தேவுடா, தேவுடா ....

இப்பதிவின் trend-ஐ பின்பற்றி இன்னும் சிலர் பிளஸ் பாயிண்ட்டுகளுக்கு தப்பு தப்பாக(!) சதவிகித மதிப்பு போடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, July 24, 2005

அமெரிக்காவின் ஏமாற்று வேலை --- India Cheated

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தையொட்டி, இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு உடன்படிக்கையில், இந்தியாவுக்கு சாதகங்களை விட பாதகங்கள் அதிகம் என்று தெரிகிறது. இம்மாதிரி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு சம்மந்தப்பட்ட sensitive-ஆன விஷயங்களில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, முக்கிய கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவு எடுக்க வேண்டியது "ஜனநாயக" நாட்டில் மிக அவசியம் !!!

இதில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே ஒரே மாதிரி தான் செயல்படுகின்றன !!! இரண்டும், ஒரே (கலங்கிய!) குட்டையில் ஊறிய மட்டைகள் தாமே ! இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இன்னபிற, அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தெரிய வராமல், கடைசி வரை ரகசியமாகவே இருக்கும் என்பது தெளிவு !!!! இதெல்லாம், இங்கு ஜனநாயகம் என்ற பெயரோடு நடக்கும் அராஜகப் போக்கு !

இடதுசாரி கட்சிகள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, காங்கிரஸ் தான்தோன்றித் தனமாக எடுத்த முடிவுகளைக் கண்டு மிகுந்த கோபத்தில் இருக்கின்றன. அதுவும், பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை திமிர் கூடாது !!! இடது சாரிகள் அரசாங்கத்துக்கான தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றால் கூட தவறில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்விஷயத்தில், இடதுசாரிகளின் நிலைப்பாடு நியாயமானது என்றே நினைக்கிறேன். வல்லுனர்களின் துணையோடு, நாம் வரையறுத்துள்ள அணு ஆராய்ச்சி திட்டத்தில் / பாலிஸியில் தலையிட்டு இந்தியாவின் கையை முறுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ள நமது அரசாங்கமும், மெத்தப் படித்த நமது பிரதமரும் கண்டனத்துக்குரியவர்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நம் அரசாங்கம் விட்டுக் கொடுத்துள்ள இரண்டு முக்கிய உரிமைகள், நமக்கு மிகுந்த சங்கடத்தையும், பண விரயத்தையும் ஏற்படுத்த வல்லவை.
1. நமது அணு ஆற்றல் உற்பத்தி உலைகளை சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புக் கொண்டது. நம் சுதந்திர செயல்பாட்டுக்கு இது குந்தகமானது.
2. நமது அணுவுலைகளை, ராணுவம் மற்றும் ராணுவம் சாரா தேவைகளுக்கு என்று வகைப்படுத்த ஆவன செய்ய ஒப்புக் கொண்டது. இது குறித்து, நமது தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகுந்த அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த சலுகைகளுக்கு பதிலாக, அமெரிக்கா இந்தியாவுக்கு உருப்படியாக ஏதும் தர/செய்ய இசைந்ததாகத் தெரியவில்லை, அமெரிக்கா நமக்கு தர முன் வந்த இரண்டு பெரிய(!) சலுகைகளைத் தவிர !!! அதாவது, இம்முறை நம் பிரதமருக்கு மிகப் பிரமாதமான, பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததும், பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு (ஜார்ஜ் பெர்னாண்டஸ் போல்!) உட்படுத்தாமல் விட்டதும் தான் !!!!

ஏதேச்சதிகார புஷ் தலைமையிலான அமெரிக்காவின் அடிவருட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏன் ஏற்பட்டது என்று யாராவது விளக்கினால் பரவாயில்லை! அதே போல், இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களை விற்று, அமெரிக்கா இன்னும் கொழுக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளதா என்று அரசாங்கம் தெளிவுபடுத்தினால் நல்லது. ஏதேச்சதிகார போக்கில், 'ஜனநாயக' அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை !! ஆனால், அமெரிக்காவுடன், நமக்கு பாதகம் இல்லாத வகையில், சமனான நல்லுறவு வைத்திருத்தல் தவறில்லை.

Thursday, July 21, 2005

Sparkling Century by C.M !

Image hosted by Photobucket.com

எதிர்பார்த்தது போலவே சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி, திரையிடப்பட்ட 4 வாரங்களில் வசூல் சாதனை படைத்து இன்று நூறாவது நாள் என்ற வெற்றி இலக்கை தொட்டிருக்கிறது !!! 'பாபா' அடைந்த சூப்பர் தோல்வியை இந்த அபார ஓட்டம் மறக்கடிக்க செய்து விட்டது ! "தலைவரின்" ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் (என்ன, ராம்கி, ஐகாரஸ், மாயவரத்தான், சரி தானே ?) இருக்கிறார்கள் !

ரஜினி தமிழ் திரையுலகில் ஒரு PHENOMENON என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது ! பாபாவில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி' மூலம் விஸ்வரூபம் எடுத்து தான் (மட்டுமே!) சேம்பியன் மெட்டிரீயல் என்று ரஜினி பலருக்கும் உணர்த்தியிருக்கிறார் ! கிரிக்கெட்டுக்கு ஒரு சச்சின், டென்னிஸ¤க்கு ஒரு பீட் சாம்ப்ராஸ் போல, தமிழ் திரையுலகிற்கு ஒரு சூப்பர் ஸ்டார் தான் அன்றும், இன்றும், என்றும் !!!

"ஜக்குபாய்" கதையை நிராகரித்து, 'ரஜினி பார்முலா' படங்களிலிருந்து சற்றே மாறுபட்ட சந்திரமுகியை தைரியமாக தேர்வு செய்து நடித்து அப்படம் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம், இனி வரும் படங்களில் சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க (தற்போது அமிதாப் நடிப்பது போல) சூப்பர் ஸ்டார் முன் வந்தால், அது அவர் திரையுலக வாழ்வில் மற்றுமொரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை !!! இன்றும் நினைவில் நிற்கும் படங்கள் அவர் நடித்த முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, புவனா ஒரு கேள்விக்குறி, மூன்று முடிச்சு ஆகியவை தானே !!!

மற்ற ரஜினி படங்கள் போல் அல்லாமல், சந்திரமுகியில் கதைக்கு (ரஜினியை விட!) அதிக முக்கியத்துவம் இருந்தது. பாபாவைத் தொடர்ந்த 3 வருட இடைவெளியும் ரஜினியை திரையில் காணவேண்டும் என்ற ஆவலை மக்களிடையே அதிகப்படுத்தி இருந்தது ! ரஜினியின் 'படையப்பா' சந்திரமுகியைக் காட்டிலும் சுவாரசியமாக (ரம்யா கிருஷ்ணனின் பாத்திர வடிவமைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்!) எடுக்கப்பட்டிருந்தாலும், படையப்பா அதன் முழு ஓட்டத்தில் திரட்டிய வசூலை, சந்திரமுகி நான்கே வாரங்களில் மிஞ்சி விட்டது என்பது ஓர் ஆச்சரியமான செய்தி !!!

அந்நியன் வசூலில் சந்திரமுகியை முந்துமா என்ற கேள்விக்கு ஓர் எளிமையான பதிலிருக்கிறது !!! அதாவது, "சான்ஸே இல்லை" என்பது தான் :) அந்நியன், 'இந்தியன்', 'முதல்வன்' ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து வந்த மற்றுமொரு (பிரும்மாண்டத்தையும், கருட புராணத்தையும், மல்ட்டிபிள் ஸ்பிலிட் gimmick-களையும் நம்பி வந்த !) ஸ்டீரியோடைப் சங்கர் படம் ! இது தான் அந்நியனுக்கான ஒரு வரி விமர்சனம் !!!!! சந்திரமுகியும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி குறித்த படம் தான் ! ஆனால், அது ஒரு "ரஜினி" படம் :)

இறுதியாக ஒரு கொசுறுச் செய்தி! ரஜினியின் அடுத்த படத்தை பூர்ணசந்திர ராவ் தயாரிக்கிறார். பி.வாசு தான் மறுபடியும் இயக்கப் போகிறார். ரஜினியின் முதல் ஹிந்திப் படமான அந்தாகானூனை தயாரித்தவர் ராவ் தான். அப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் பெற்ற சம்பளம், அதிகமில்லை ஜென்டில்மென், 7 லட்சம் தான் !!!!!!!!!!!!!!!!!

நன்றி: ரஜினி ராம்கி! (புரியும் என்று நினைக்கிறேன்!)

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 16, 2005

மகாபாரதம் --- Questions

**********************
மகாபாரதம் இதிகாசமா, கடவுள் புராணமா, பேரிலியக்கமா என்பதையெல்லாம் விடுத்து, அதில் படைக்கப்பட்டிருக்கும் சிலபல கதாபாத்திரங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அவற்றில் சில கதாபாத்திரங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். அவற்றைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் உடனடியாகத் தோன்றும் ஒரு (தமிழ்!) வார்த்தையை கூறுங்களேன் பார்க்கலாம் !!! உதாரணத்துக்கு சகுனி என்றவுடன் "சூதாட்டம்" என்ற சொல் மனதில் எழலாம் !

1. அர்ஜுனன்
2. தர்மன்
3. பீமன்
4. கர்ணன்
5. துரியோதனன்
6. திருதாஷ்டிரன்
7. விதுரர்
8. சிகண்டி
9. கிருஷ்ணர்
10. துச்சாதனன்
11. அபிமன்யு
12. பீஷ்மர்
13. துரோணர்
14. அஸ்வத்தாமன்
15. குந்தி
16. திரௌபதி
17. ஏகலைவன்
18. சல்லியன்
******************************

Tuesday, July 12, 2005

SUPERSTAR விசிலடிக்கிறார் !

இளையராஜாவின் திருவாசகம் ஓரட்டேரியோ வெளியீட்டு விழாவில், வைகோவின் உணர்ச்சி மிகு பேச்சைக் கேட்டு ரஜினி உற்சாகமாகி விசில் கொடுக்கிறார் ! இசைஞானி அவர்கள் அதை ரசிக்கிறார். ரஜினி கலந்து கொண்ட சமீபகால விழாக்களில் இவ்வளவு ஜாலியாக இருந்தது இந்த விழாவில் தான் !!!

Image hosted by Photobucket.com

Friday, July 08, 2005

படமும் நகைச்சுவையும் - 2

பி.கு: முதல் படம் நிச்சயமாக அன்புமணி அவர்களுக்கு பிடிக்காது !!!

ஒரு திகிலான மனோதத்துவ தேர்வு --- விடை இதோ !!!

சிறந்த விடை: அவ்விளம்பெண் தனது தங்கையின் இறுதிச் சடங்கில் அவள் முன் சந்தித்த வாலிபன் தோன்றக்கூடும் என நம்பியதால், அக்கொலையை வேறு வழியின்றி(!) செய்தாள்.

மேற்குறிப்பிட்ட பதிலைக் கூறியவர்கள், ஒரு சைக்கோவைப் போல சிந்தித்தவர்கள் !! ஆபத்தானவர்கள் !!! இனிமேல், அவர்களிடம் (ஞானபீடம் மற்றும் அபூ முஹை) நான் எச்சரிக்கையாக இருப்பேன் ;-)
ஆண்டவனுக்கு நன்றி !!!

ஏனெனில், அமெரிக்காவில், குரூரக்கொலைகள் பல செய்த சைக்கோ கொலைகாரர்கள் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர் கேட்ட இக்கேள்விக்கு இதே விடையைக் கூறினார்கள் !!!!! இந்த சிறந்த பதிலை கூறாதவர்கள் சந்தோஷப்படலாம், கூறாதது அவர்களுக்கு நல்லதும் கூட :)

என்றென்றும் அன்புடன்
பாலா

ஒரு திகிலான மனோதத்துவ தேர்வு !!!

கீழுள்ளதை மிக கவனமாக படித்து விட்டு இறுதியில் கேட்கப்பட்டிருக்கும் வினாவுக்கு நேர்மையான விடை தாருங்கள் !!!

இது நீங்கள் அறியா(!) உங்கள் குணாதசியத்தை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.

ஓர் இளம்பெண், தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கில் முன் அவள் பார்த்திராதா/அறியாத ஓர் ஆடவனைச் சந்தித்தாள். தான் சந்தித்த ஆடவர்களிலேயே அவன் தான் சிறந்தவன் என்றும், தன் கனவுக் காதலன் என்றும் தீர்மானித்து அவன் மேல் உடனே காதல் கொண்டாள் !!! துரதிருஷ்டவசமாக அவள் அவன் முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ கேட்டு வாங்க மறந்து போனாள். அவள் எவ்வளவு முயன்றும் அவளை வசீகரித்த அந்த வாலிபனை அவளால் கண்டுபிடிக்க இயலவில்லை. மிகுந்த
கவலைக்குள்ளானாள் ! பசலை நோய் அவளை வாட்டியது !

சரியாக 7 நாட்களுக்குப் பின் அந்த இளம்பெண் தன் அருமைத் தங்கையை கொலை செய்தாள் !!!!!

கேள்வி: அவ்விளம்பெண் தன் தங்கையை கொலை செய்யுமளவுக்கு என்ன நடந்திருக்கும் ? எது அக்கொலைக்கு தூண்டுதலாக அமைந்திருக்கும் ?

குறிப்பு: இக்கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த விடைகள் உண்டு !!!!!!

நன்றாக சிந்தித்து விட்டு நீங்கள் தரப்போகும் நேர்மையான பதில் உங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறிந்து கொள்ள வழி செய்யும் !!!

இக்கேள்விக்கான விடைகளை தனிப்பதிவில் (நாளை) சொல்கிறேன்!

வலைப்பதிவு நண்பர்கள் தங்கள் விடையை பின்னூட்டத்தில் பதியவும்.

இத்தேர்வு குறித்து ஏற்கனவே படித்தறிந்த வலைப்பதிவாளர்கள், தயவு செய்து இதில் கலந்து கொள்ள வேண்டாமே !

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails